Wednesday 31 October 2012

பித்தா பிறை சூடி


சிவாய நம

                       
பித்தா பிறை சூடி

தோடு ,கூற்று,பித்தா, இம்மூன்றும் பீடுடைய தேசிகன் பேரருளாமே"எந்த ஒரு பாடலைப் பாடுவதற்கும்,அல்லது எந்த ஒரு நற் காரியத்தைத் தொடங்குவதற்கும் முன்னரே இம் மூன்றுப் பதிகப் படல்களில் ஒன்றைப் பாடி அதன்பின் அச்செயலைத் தொடர்ந்தால் அப்பாடலே நற்குருவாய் நின்று அருள் பாலிக்கும் என்பதே திருவாக்கு இம்மூன்றுமே தேவாரம் பாடிய மூவர் முதலிகளின் முதல் வாக்கு.ஞானசம்பந்தப்பெருமானின் முதல் வாக்கு தோடு. நாவுக்கரசரின்  தெய்வீகத்தொடக்கமே கூற்று. பித்தா என்பது சுந்தரத்தமிழின் மந்திரத்தொடக்கம்.
                       
இம்மூன்றிலுமே பித்தா என்றத் தொடக்கத்திற்கு ஒரு தனிச் சிறப்புண்டு..பயத்திலோ பசியிலோ பாடிய முதல்வாக்கு தோடு .நோயிலோ அதன் வலியிலோ பாடிய முதல் வாக்கு கூற்று.ஆனால் சுந்தரரிடம் இறைவன் கேட்டு வாங்கிய முதல்நற்றமிழ்
 சொல் பித்தா என்பதாகும்

                   தடுத்தாட்கொண்ட புராணத்தில் தம்மை ஆட்கொள்ளவேண்டி வெண்ணெய்நல்லூருக்கு அழைத்து வந்து ,கோயிலுக்குள் மறைந்து பின் தம் கோலம் காட்டி நின்ற கோமானின்  அருளை எண்ணி உருகி நின்ற வேளையில்" எமக்கு அருச்சனை பாட்டேயாகும் ஆகவே சொற்றமிழால் எமைப் பாடுக"என்று இறைவன் கேட்க, ஆவல் கொண்ட நாவலூராரும் எவ்விதம் பாடலைத்தொடங்க என்றுத் திகைத்து நின்றார்.இறைவனாரே "மணப்பந்தலில் என்னைப் :"பித்தனோ மறையோன்" என்று வாது மொழிந்தமையால் பித்தா என்றேத் தொடங்குக எனப் பணித்தார்.

         நாவலூராரும் பித்தா பிறைசூடி எனத்தொடங்கி இவ்வுலகம் முழுமையும் உய்வைப் பெறச்செய்யும் அற்புதப் பதிகத்தைப்பாடினார்ஆலமுண்ட கண்டனின் அருள் வாக்கினையேற்று அணுக்கத்தொண்டர் ஆலாலசுந்தரர் பாடிய பாட்டல்லவா.இதன் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமோ.இப்படலில் எப்போதும் இறைவனின் நினைவையுடையவனே மனிதன்;இறை எண்ணம் இல்லா மனம் கொண்டவன் பேய் என்று மிக அழகாகப் பக்தி சிந்தனையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்."நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை பேயாய்த் திரிந்தெய்த்தேன்"என்கிறார்.

   பித்தாபிறைசூடி என்றச் சொற்றொடருக்கேத் தனி மகத்துவம் உண்டு,முதல் திருமுறையிலேயே ஞானசம்பந்தப் பெருமான் எருக்கத்தம் புலியூரின் சிறப்பைப் பாடும் போது
                              விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
                              பெண்ஆண்அலிஆகும் பித்தாபிறைசூடி
என்று இந்த அற்புதப் பதத்தைப் பயன் படுத்துகிறாரென்றால் இதை ஒரு அற்புத மந்திரச் சொல்லாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்இறைவனையே இன்னும் வேண்டும் என்று கேட்கவைத்த அற்புதப் பதிகமிது.ஓதுவார்க்கும் காதில் கேட்ப்பார்க்கும் நலமே விளையும்.
                            
திருச்சிற்றம்பலம்
                                       

சு . நாகராஜன்,
தலைவர்,
சேக்கிழார் அறநெறி இயக்கம்
          கன்னியாகுமாரி   மாவட்டம். 

No comments:

Post a Comment